அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் நீக்கம்-Party Membership of Agrapatana PS Chairman Kathirselvan Suspended by CWC-Violating Quarantine Law
அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் தற்போது அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் அவர் குணமடைந்து வந்ததும் அவரிடம் விளக்கம் கோரப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கூறினார்.
பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை மீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில், அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில் அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிரிஷாந்தன்)